திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் தூரம் என்று பொருள்.அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடுவது திதியாகும் நண்பர்களே.அமாவாசை நாள் அன்று சூரியனும் சந்திரனும் 0 டிகிரியில் இருப்பார்கள்.அதற்கு அடுத்த நாள் சந்திரன் சூரியனின் பார்வையிலிருந்து 12 டிகிரி விலகிச் செல்லும்.இப்படி விலகி 12 டிகிரி நிற்க்கும் தூரம்தான் பிரதமை.அடுத்து பிரதமையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் துதியை.அடுத்து துதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் திருதியை.அடுத்து திருதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் சதுர்த்தி.அடுத்து சதுர்த்தியில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் பஞ்சமி.இப்படியாக 12 டிகிரி இடைவெளியில் அடுத்து சஷ்டி,சப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி,சதுர்தசி என சந்திரன் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று 15 ம் நாள் 180 டிகிரியில் ராசிச்சக்கரத்தில் சூரியனிலிருந்து ஏழாவது ராசியில் நிற்பது பௌர்ணமி ஆகும்.
இப்படி அமாவாசைக்கு அடுத்து வரும் திதிகளுக்கு வளர்பிறை திதிகள் என்று பெயர்.அடுத்து இதே சுழற்சி முறையில் பௌர்ணமியில் இருந்து அதே 12 டிகிரி இடைவெளியில் ஒவ்வொரு திதியாக சூரியனை நோக்கி நெருங்கி சென்று 15 ம் நாள் சூரியனோடு 0 டிகிரியில் நிற்பது அமாவாசை ஆகும்.இப்படி பௌர்ணமிக்கு அடுத்து வரும் திதிகளுக்கு தேய்பிறை திதிகள் என்று பெயர். இப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் ஒவ்வொரு 12 டிகிரி நகர்வுப்புள்ளிக்கு வைத்த பெயர்களே திதிகள் நண்பர்களே.இதில் அமாவாசையிலிருந்து சந்திரன் 180 டிகிரி விலகிச்செல்லும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும்,பௌர்ணமி திதியிலிருந்து சந்திரன் சூரியனை நோக்கி வரும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.அமாவாசை முதல் பௌர்ணமி வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.பௌர்ணமி முதல் மீண்டும் அமாவாசை வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.30 × 12 = 360 டிகிரி.பதிவில் இணைத்துள்ள படத்தை பாருங்கள்.புரியும் நண்பர்களே.
இந்த திதிகளில் குறிப்பிட்ட கிழமைகளில்,குறிப்பிட்ட திதி வருவது சுப திதிகள்/ அசுப திதிகள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
நற்பலன் தரும் சுபதிதிகள்:
ஞாயிற்றுக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,திங்கட்கிழமை வரும் நவமி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சஷ்டி திதியும்,புதன்கிழமை வரும் திருதியை திதியும்,வியாழக்கிழமை வரும் ஏகாதசி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் திரயோதசி திதியும்,சனிக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும் சுபகாரியங்களுக்கு ஏற்ற திதிகள் நண்பர்களே.
சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்:
ஞாயிற்றுக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும்,திங்கட்கிழமை வரும் சஷ்டி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி திதியும்,புதன்கிழமை வரும் துதியை திதியும்,வியாழக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியும்,சனிக்கிழமை வரும் சப்தமி திதியும் சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்.இந்தக் காலங்களில் சுப காரியங்கள் தவிர்ப்பது நலம் நண்பர்களே.மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை மட்டும் வைத்தே சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்யக்கூடாது.நட்சத்திர தாராபலனோடு சேர்த்துப்பார்த்து சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்வது மிகச்சிறப்பு நண்பர்களே.
திதிகளில் செய்ய வேண்டிய காரியங்கள் மற்றும் பலன்கள்:
பிரதமை திதி
வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும்,திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.உலோகம் கருங்கல் மரம் இவைகளில் சித்திரை வேலைகள் செய்யலாம்.கத்தி போன்ற ஆயுதங்கள் செய்யலாம்.மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிக உழைப்பு இருக்கும்.விட்டுக்கொடுத்து போகும் தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.அவசர புத்தி இருக்கும் அவசரமாக ஒரு காரியத்தை செய்வார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்கும்.வீடு வண்டி வாகனங்கள் அமையும்.அதில் பிரச்சனை இருக்கும். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி நண்பர்களே.
துதியை திதி
அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை,ஆபரணங்கள் தயாரிக்கலாம்.விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.யாத்திரை செல்லலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் லாபம் உண்டு.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.தாய் பாசம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வு அமையும்.தந்தை சம்பந்தப்பட்ட உறவுகளில் பிரச்சனைகள் இருக்கும்.இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன் நண்பர்களே.
திருதியை திதி
குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள்.மேடைப் பேச்சாளராக இருப்பார்.குழந்தைகளால் பிரச்சனை இருக்கும்.அரசு வழி ஆதாயம் உண்டு.சுய தொழிலில் இழப்பை சந்திப்பார்கள்.தந்திரசாலிகளாக இருப்பார்கள்.இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி) நண்பர்களே.
சதுர்த்தி திதி
முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை இருக்கும்.அதிகமாக அலைச்சல் பட வேண்டியது இருக்கும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.சிறுவயதில் விபத்தை சந்திக்கலாம்.சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.மணவாழ்வில் பிரச்சனை இருக்கும்.எளிமையாக இருக்க விரும்புவார்.சாப்பாட்டு ராமனாக இருப்பார்.எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது நண்பர்களே.
பஞ்சமி திதி
எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.இந்தத் திதியில் பிறந்தவர்கள் படிப்பில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் இருக்கும்.எளிதில் காதல் வயப்படுவார்கள்.நிறைய ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.கடன் பிரச்சனை இருக்கும்.சொத்துக்கள் இறுதிக்காலத்தில் அமையும்.குழந்தைகள் மேல் பிரியமாக இருப்பார்.இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.பஞ்சமி திதியில் செய்யும் காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும் நண்பர்களே.
சஷ்டி திதி
சிற்ப,வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.பசுமாடு வீடு வாகனம் விலைக்கு வாங்கலாம்.மருந்து உட்கொள்ளலாம் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.சாணக்கியத்தனமும்,தந்திரமும் இருக்கும்.முன்கோபம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வை விரும்புவார்.இதற்காக எந்த எல்லைக்கும் போவார்.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.கடன் பிரச்சனை இருக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.நொறுக்குத் தீனியை விரும்பி உண்பார்.இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும் நண்பர்களே.
சப்தமி திதி
பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் தாயாருடன் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருப்பார்.பேச்சுத் திறமை உள்ளவர்களாக இருப்பார்.கூட்டுத் தொழில் சிறக்கும்.மனைவி வழி ஆதாயம் உண்டு.வலிமையான உடல் அமைப்பு உள்ளவர்.வீடு வண்டி வாகனங்கள் அமைவதில் தாமதம் உண்டாகும்.இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும் நண்பர்களே.
அஷ்டமி திதி
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.யுத்தம் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் போராட்ட குணம் இருக்கும்.போராட்டமான வாழ்க்கையும் அமையும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.காதல் மற்றும் காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.மண வாழ்வில் நிச்சயம் பிரச்சனை இருக்கும்.சொத்து பிரச்சனைகள் உண்டாகும்.அதிகமாக விபத்துகளைச் சந்திப்பார்கள்.ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை நண்பர்களே.
நவமி திதி
சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.போர் செய்யலாம்.பகைவர்களை சிறை பிடிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.பொருளாதார பிரச்சனை இருக்கும்.அழகான தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.நேர்மையை கடைப்பிடிப்பார்கள்.அதுவே இவர்களுக்கு பிரச்சனையாகவும் இருக்கும்.குளிர் உணவுகளை அதிகம் விரும்புவார்.வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை நண்பர்களே.
தசமி திதி
எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் விரயங்கள் ஏற்படும்.வாக்குப்பலிதம் உடையவர்.கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பவர்.தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள்.போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை நண்பர்களே.
ஏகாதசி திதி
விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.ஆடை ஆபரணம் செய்யலாம்.வாஸ்து சாந்தி செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கும்.தந்தை வழி ஆதாயம் இருக்கும்.திருமண வாழ்வில் ரகசியம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.இதற்கு, ருத்ரன் அதிதேவதை நண்பர்களே.
துவாதசி திதி
தனம் தானியங்கள் சம்பாதிக்கலாம்.சுபச் செலவுகள் தர்ம காரியங்கள் செய்யலாம்.நிலையுள்ள மற்றும் நிலை இல்லாத காரியங்கள் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் தவிர்த்து செய்யலாம்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏமாற்றம் உண்டு.கல்வியில் ஆர்வம் இருக்கும்.சுறுசுறுப்பாக இருப்பார்.தன்னை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.இறுதிக்கால வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருக்கும்.சுய தொழிலில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள்.கவனம் தேவை. அதிதேவதை விஷ்ணு நண்பர்களே.
திரயோதசி திதி
சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் வாக்கால் தொழில் செய்வார்கள்.(ஆசிரியர்கள்,பேச்சாளர்கள்).பொருளீட்டுவதில் குறியாக இருப்பார்கள்.வாகன தொழில் சிறப்பாக இருக்கும்.உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தை மீது பாசம் உள்ளவராக இருப்பார்.குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும்.திரயோதசி திதிக்கு அதிதேவதை மன்மதன்.சிவபக்தராக இருப்பார்.வெகு காலங்கள் நிலைத்திருக்க வேண்டிய மங்கள காரியங்கள் செய்யலாம் நண்பர்களே.
சதுர்த்தசி திதி
பல் சம்பந்தப்பட்ட வைத்தியம் செய்யலாம்.மாமிசம் சாப்பிடலாம்.யாத்திரை செல்லலாம்.ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த திதி.வளர்பிறையில் மட்டும் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் ஆர்வம் உடையவராக இருப்பார்.மதம் இனம் மாறிய காதல் உண்டாகும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.அதிகமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தையால் பிரச்சனை ஏற்படும்.பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கும்.மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.காளி இந்த திதிக்கு அதிதேவதை நண்பர்களே.
பௌர்ணமி திதி
ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம்.போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள் செய்யலாம்.தேவதை பிரதிஷ்டை செய்யலாம்.தோஷ பரிகாரங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரம் நன்கு அமையும்.அழகானவராக இருப்பார். பேச்சாற்றல் உடையவராக இருப்பார்.சுய ஜாதகத்தில் சூரியன் சந்திரன் பரிவர்த்தனையில் இருந்தால் சிறப்பு.கலைத்துறைகளில் ஆர்வம் இருக்கும்.மகான்கள் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஆர்வம் இருக்கும்.யோகக் கலையில் ஆர்வம் இருக்கும்.கார உணவுகளை விரும்பி உண்பார். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை நண்பர்களே.
அமாவாசை திதி
பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்கு மேல் யோகம் உண்டாகும்.சுய உழைப்பால் முன்னேறுவார்.தனிமையை விரும்புவார்.சமையல் கலையில் ஆர்வம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.வாக்குப்பலிதம் உள்ளவர். ஜோதிடம் நன்கு சித்திக்கும்.இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.சிவன், சக்தி அதிதேவதை நண்பர்களே...
ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறந்தாலும் திதியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பிறக்காமல் இருப்பது சிறப்பு.ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறக்கிறாரோ அந்தத் திதியின் இருப்பு நாழிகை அதிகமாக இருப்பது மிகச் சிறப்பு.அதிகமாக இருப்பது நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.திதியின் மொத்த நாழிகையை நான்காக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதில் முதல் பகுதியும்,கடைசிப்பகுதியும் தவிர்த்து நடுப்பகுதிக்குள் இருப்பு நாழிகை அமைவது சிறப்பு நண்பர்களே.திதியால் ஏற்படும் தோஷங்களுக்கும்,பாதிப்புகளுக்கும் திதி நித்திய தேவதைகளை வணங்கி வருவதும்,திதி நித்திய தேவதைகளுக்கு உண்டான காயத்ரி மந்திரங்களை உச்சாடனம் செய்வதும் மிகச்சிறப்பான நிவர்த்தியாக இருக்கும் நண்பர்களே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக